மற்றவை

வைக்கத்தின் வரலாறு வெறும் கொண்டாட்டமல்ல! இன்றும் தொடர வேண்டிய சமூகநீதிப் போர்! தமிழ்நாடு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு!

வைக்கத்தின் வரலாறு வெறும் கொண்டா Copy

தீர்மானம் – 1

வைக்கத்தின் வரலாறு வெறும் கொண்டாட்டமல்ல! இன்றும் தொடர வேண்டிய சமூகநீதிப் போர்! தமிழ்நாடு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு!

            கேரள மண்ணில் 1924-25 ஆண்டுகளில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் சாதியால் பிரிக்கப்பட்டுள்ள இந்திய சமூகத்தில் பதிக்கப்பட்டுள்ள மகத்தான வரலாற்றுத் தடமாகும்.

            பாராமை, அணுகாமை, தொடாமை, ஆதிய சாதியின் கொடூரமான பாகுபாடுளின் தொட்டிலாக கேரள சமூக இருந்தது. எனவே தான் சுவாமி விவேகானந்தர் அவர்கள் 1892ல் தனது கேரள பயணத்தின் போது கேரளாவை பைத்தியக்காரர்களின் விடுதி என்றார். இத்தகைய பழமைவாத மண்ணில் தான் மாபெரும் வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

            கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் மாகதேவர் ஆலயத்தைச் சுற்றியுள்ள  தெருக்களில் ஈழவர், புலையர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

            இதனை எதிர்த்து வைக்கம் வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்கிற  போராட்டம் 1924 மார்ச் 30  அன்று துவங்கியது. இந்தப் போராட்டம் 603 நாட்கள் நீடித்து மகத்தான வெற்றி பெற்றது. ஸ்ரீ நாரயண குரு,  மகாத்மா காந்தி, ஈ.வெ.ரா பெரியார், டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப், கே.பி.கேசவமேனன்,  என இப்போராட்டத்தில் பங்களிப்பு செலுத்திய ஆளுமைகளின் பட்டியல் மிக நீளமானது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தந்தை பெரியார் இரண்டு முறை கைதுசெய்யப்பட்டு சில மாதங்கள் வரை சிறையில் இருந்தார். போராட்டம் தொய்வடைந்தபோது அதற்கு புத்துயிர் ஊட்டியவர் தந்தை பெரியார் என்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்திட்ட பெருமை யாகும்.

            இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போராட்டத்தின் நினைவுகள் 603 நாட்கள் கடைபிடிக்கப்படும் என கேரள அரசும் ஓராண்டு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கிறது.

            வைக்கம் போராட்டத்தின் 100 வது ஆண்டு என்பதை  வரலாற்றின்  தடம் மட்டுமல்ல,இன்றும் அதன் தடத்தில் பயணிக்க வேண்டிய நிலையில் தான் சமூகம் இருக்கிறது என்பதை அது நமக்கு அழுத்தமாக நினைவூட்டுகிறது.

            பாராமை, அணுகாமை, தொடாமை என்கிற வடிவங்களில் இல்லாவிட்டாலும் சாதியின் ஏற்றதாழ்வுகள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நிழல்போல தொடரவே செய்கின்றது. பால்வாடிகள் முதல் மயானங்கள் வரை சாதியின் ஏற்றதாழ்வுகள் இந்திய அரசமைப்புக்கும் மனித மாண்புக்கும் சவால் விடுகின்றன.

            இத்தகு தருணத்தில் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவும் அதன் அரசியல் குருபீடமான ஆர்.எஸ்.எஸ் ம் வழக்கொழிந்து போன பழமைகளைக் கூட மீள் கட்டமைக்க தீவிரம் காட்டி வருகின்றன.

            ஆயிரம் ஆண்டுகள் பழமையான வழக்கங்கங்களையும், பிற்போக்கு சனாதனக் கருத்தியல்களையும் விஷம் போல் விதைத்து வருகின்றன என்பதை மிகுந்த கவலையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் சமூகத்துக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறது.

            வைக்கம் போரட்டத்தின்  100வது ஆண்டு என்பது கொண்டாடப்படவேண்டியது மட்டுமல்ல அதன் மிச்சசொச்சங்களாக இன்றும் நீடிக்கிற சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், அதன் கருத்தியல் சித்தாந்தமான சனாதனத்துக்கு எதிராகவும் போராட வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. எனவே தமிழ்நாடு முழுவதும் வைக்கம் போராட்டத்தின் 100வது  ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சமூகநீதியை உயர்த்திப்பிடித்து சாதிய ஏற்றத்தாழ்வுகளை வீழ்த்துகிற நிகழ்ச்சிகளை நடத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  தெரிவித்துக் கொள்கிறது.               

            மேலும் கேரள மண்ணில் நிகழ்த்தப்பட்ட வைக்கம்  போராட்டம் வெறும் கொண்டாட்டமல்ல, இன்றும் தொடர வேண்டிய சமூகநீதிப் போர். இப்போரில் தமிழ்நாடு மக்கள் அனைவரும் பங்களிப்பு செய்திட முன்வர வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் தமிழ்நாடு  மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.