மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 30 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, குடியரசுத் தலைவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் ஆளுநர்கள் அரசியல் ஆயுதமாகவும், ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்த கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார்.
அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்து, பின்னர் நிறுத்தி வைத்திருப்ப தாக ராஜ்பவன் அறிக்கைகள் கூறுகின்றன. முதலமைச்சரின் அறிவுரை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ, பதவி நீக்கம் செய்யவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தது அரசியல் சாசனத்தை மீறும் செயல்.
தொடர்ந்து ஆளுநரின் செயல்பாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அரசின் நிலைபாட்டுக்கு முரண்பட்டதாகவும், அரசியல் சாசன அதிகார வரம்பை மீறுவதாகவும் உள்ளது. எனவே, ஆர்.என்.ரவி அரசியல் சாசன அடிப்படையிலான ஆளுநர் பதவியில் நீடிக்க முற்றிலும் பொருத்தமற்றவர். குடியரசுத் தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்தி களும் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குரலெழுப்ப முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.