சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

சிபிஐ(எம்) சுதந்திர தின வாழ்த்து!

Freedome

அடிமைத்தளைகள் நொறுக்கப்பட்டு அரசியல் விடுதலை பிரகடனம் செய்யப்பட்டு, விடுதலையின் 76 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு இதயப்பூர்வமான, உணர்ச்சி மிகுந்த, வீரம் செறிந்த விடுதலைத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையும் அனுபவித்த தன்னலமற்ற போராளிகளால்தான் இந்திய அரசியல் விடுதலை சாத்தியமானது. இத்தகைய நீண்ட போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானதாகும்.

துவக்கக் காலத்திலேயே மவுலானா ஹஸ்ரத் மொஹானி, ஸ்வாமி குமரானந்தா, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஆகிய கம்யூனிஸ்ட்டுகள்தான் “பூரண சுயராஜ்யம்” (முழு விடுதலை) என்ற முழக்கத்தை முன்வைத்தனர் என்பது நெஞ்சில் நிறுத்த வேண்டிய மிக முக்கியமானதொரு அம்சமாகும்.

அரசியல் விடுதலை மட்டுமல்லாது, சமூக, பொருளாதார விடுதலையையும் உறுதி செய்யும் நீண்டதொரு புரட்சிகரமான பாதையில் இந்திய நாட்டை அழைத்துச் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுதியான போராட்டங்களை சமரசமின்றி தொடர்கிறது.

76 ஆண்டு கால இந்திய சுதந்திரத்தையும் போராடிப் பெற்ற சுதந்திரத்தின் விழுமியங்களையும் பாதுகாப்பதும்; அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச்சார்பற்ற சோசலிசக் குடியரசு என்பதன் அடித்தளங்களை பாதுகாப்பதும் இன்று மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கடமையாகும்.
ஏனெனில், விடுதலை போராட்டத்தில் எவ்வித பங்களிப்பையும் செலுத்தாத ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கடந்த 9 ஆண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, சுதந்திர இந்தியாவின் அடித்தளங்களைத் தகர்த்துக் கொண்டிருக்கிறது.

வரலாறு நெடுகிலும் மூவர்ணக் கொடியை அவமதித்தே வந்த பாஜக தலைமையிலான ஆட்சியாளர்கள் ஒருபுறத்தில் விடுதலைக் கொண்டாட்டங்களுக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டே மறுபுறத்தில் தேசத்தின் அனைத்து வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறார்கள்.

மதநல்லிணக்க சமூகத்தை கட்டியெழுப்புவோம்

மதவெறி நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு, மதப் பகைமையை விசிறி விடுகிற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். மணிப்பூரிலும், ஹரியானாவிலும், ஓடும் ரயிலிலும் – என எல்லா இடங்களிலும் மதவெறி தாண்டவமாடுகிறது. அவர்களின் இத்தகைய நடவடிக்கைககள் நாட்டு மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விடுதலையின் 76 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிற இத்தருணத்தில் மத, இன, மொழி, சாதி, பிராந்திய மற்றும் பாலின வேறுபாடு ஏதுமின்றி மக்களை பாதுகாக்கும் கடமையை உறுதியோடு முன்னெடுத்துச் செல்வோம்.

மதநல்லிணக்கம் கொண்ட சமூகமாக இந்திய சமூகத்தை கட்டியெழுப்ப, போராட சபதமேற்பதோடு, விடுதலையின் பலன்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மக்கள் ஜனநாயகம் எனும் அடுத்த உயரிய கட்டத்திற்குள் கொண்டு செல்லும் மகத்தான பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல 76 ஆம் ஆண்டு சுதந்திர நாளில் உறுதியேற்பதோடு, சுதந்திர தின நல்வாழ்த்துக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு உரித்தாக்குகிறது.