இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் 2023 ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
நாடு முழுவதும் கடுமையான விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு தானியங்கள், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகளின் விலை வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. சமீபத்தில் தக்காளி விலை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு கிலோ ரூ. 250/-க்கு விற்றது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் தாங்க முடியாத சுமையை எதிர்கொள்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரன்முறையற்ற சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு விலைஉயர்வுக்கான காரணங்களில் முக்கிய ஒன்றாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டை குறைத்திருப்பதன் காரணமாக பொதுவிநியோகம் பாதிக்கப்படுவதுடன் வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வதற்கும் காரணமாக இருக்கிறது. மக்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்த்து வலுமிக்க போராட்டத்தை நடத்திட வேண்டிய அவசியமிருக்கிறது.
வேலையின்மை என்பது முதன்மையான பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக, பணியில் இருப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கை என்பது அனைத்து துறைகளிலும் நீடிக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியை கைப்பற்றிய மோடி அதுகுறித்து கடுகளவும் கவலைப்படவில்லை. ஒன்றிய - மாநில அரசு துறைகளில், பொதுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களையும், பின்னடைவு காலிப் பணியிடங்களையும் நிரப்பப்படாமல் இருப்பது, நிரந்தர பணியாளர்கள் ஓய்வுபெற்றால் அந்த இடத்தில் புதிதாக நிரந்தர பணியாளர்களை கொண்டு நிரப்புவதற்கு பதிலாக ஒப்பந்தம், வெளிமுகமை, மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற முறையில் உழைப்புச் சுரண்டலை அரசே ஊக்குவிக்கும் நிலைமை என்பது தொடர்கிறது. ஒன்றிய அரசு கடைபிடிக்கும் நவீன தாராளமய பொருளாதார கொள்கையே இதற்கு அடிப்படை காரணமாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
எனவே, வேலை என்பதை அடிப்படை உரிமையாக்க வேண்டும், வேலையில் இருப்பவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும், தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும், பின்னடைவு காலிப் பணியிடங்கள் உள்ளிட்டு காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்பிட வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை, முழுமையான கூலி வழங்குவதை உத்தரவாதப்படுத்துவதுடன் அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் - நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை உருவாக்கி நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கத்தை மேற்கொள்வதுடன் 2023 செப்டம்பர் 7ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென்று தீர்மானித்துள்ளது. மக்கள் நலன் காக்கும் இம்மறியல் போராட்டத்தில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாதர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறு சிபிஐ (எம்) மாநிலக்குழு அறைகூவி அழைக்கிறது.