சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

தீர்மானம் – 1 அரசுப் பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினைசெயல்படுத்தும் வகையில் தனிச்சட்டம் இயற்றிடுக!

அரசுப் பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் 2023 ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு

            அண்மையில் உச்சநீதிமன்றம், அரசு பணிகளில் பதவி உயர்வின் போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றக் கூடாது என கூறியுள்ளது. இது இந்திய அரசியல் சாசன சட்ட சரத்து 16(4)படி பதவி உயர்வில், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை வழங்க வழிவகை செய்துள்ளதை நிராகரிப்பதாகும். மேற்படி அரசியல் சாசன சட்டம் (16 4-ஏ)-ன்படி தற்போது ஒன்றிய அரசு பணிகளிலும் பதவி உயர்வின் போது, பட்டியலின மற்றும் பழங்குடியின பணியாளர்களுக்கு முன்னுரிமை கிடைத்து வருகிறது.

            உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ளோருக்கான பதவி உயர்வு நேரங்களில் முன்னுரிமை வாய்ப்பை கைவிடும் போது, சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினர் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகும். பிரதிநிதித்துவம் குறையும், சமூக நீதி பறிபோகும். ஏற்கனவே பல்வேறு போட்டி தேர்வுகள் மூலம், ஒரு பகுதி உயர்நிலை பணியிடங்கள் நேரடி நியமனம் இல்லாமல் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

            இந்நிலையில் இட ஒதுக்கீடு கொள்கை மூலம் பட்டியலின மற்றும் பழங்குடி மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், உள்ஒதுக்கீடு மூலம் பயன்பெறும் ஆதரவற்ற விதவை, மாற்று திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தமிழ்வழி பயின்றோர் ஆகியோர் தற்போது அனுபவித்து வரும் முன்னுரிமை வாய்ப்பினை இழக்கும் நிலை உருவாகும்.

            எனவே, தமிழ்நாடு அரசு பதவி உயர்வுகளில் பின்பற்றப்படும் தற்போதைய நடைமுறை தொடருவதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்றுவது அவசியம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. அதேபோல் மேற்படி பதவி உயர்வு மூலம் உருவாகும் காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுவது உள்ளிட்டு வேலை வாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு, சமூக நீதியை பாதுகாப்பதில் ஜனநாயக சக்திகளை போராட முன்வர வேண்டுமென அறைகூவி அழைக்கிறது.

(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்