இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் 2023 ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000/- உரிமைத் தொகை செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கிடும் தமிழ்நாடு அரசின் முடிவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது. மகளிருக்கு வழங்கப்படும் இந்த தொகை அந்தந்த குடும்பதினருக்கு பேருதவியாக இருக்கும்.
மாநிலம் முழுவதுமுள்ள மகளிர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திட்டம் இதுவாகும். இந்த உரிமைத் தொகை பெறுவதற்கான நிபந்தனைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது எதிர்பார்த்திருந்த கணிசமான குடும்பங்கள் இந்த உதவியை பெற முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் என்று வரம்பு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மாதம் ரூ. 20,000/- ஈட்டினாலே உரிமைத் தொகை பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்போது நிர்ணயித்துள்ள ஆண்டு வருமான வரம்பை உயர்த்தி கூடுதலான மக்களிர் உரிமைத் தொகை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அத்துடன் மனைவி இல்லாத குடும்பத்தில் சகோதரி அல்லது தாய் குடும்ப தலைவியாக பாவித்து அவர்களுக்கு வழங்கிட வேண்டும். அதேபோல், அரசின் முதியோர் உதவித் தொகை பெறுபவர், மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறுவோர்களுக்கு உரிமைத் தொகை கிடையாது என்பது ஏற்புடையதாக இல்லை.
எனவே, மாற்றுத் திறனாளிகள் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதுடன், முதியோர் உதவித் தொகை பெறும் குடும்பங்கள் உள்ள குடும்பத் தலைவிகளுக்கும், ஊதியம் பெறாத தகுதியான உள்ளாட்சி பிரதிநிதிகளின் குடும்பங்களுக்கும் வழங்கும் வகையில் நிபந்தனைகளை தளர்த்த முன்வர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.