சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

தீர்மானம் – 3 நான்குநேரியில் பள்ளி மாணவர் மீதுகொலைவெறித் தாக்குதல்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

நான்குநேரியில் பள்ளி மாணவர் மீது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் 2023 ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

சாதிய மேலாதிக்க வெறியோடு நான்குநேரியில் +2 மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கை மீது நடத்தப்பட்டுள்ள கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

            சாதி ரீதியிலான பாகுபாடுகளும், ஒடுக்குமுறையும் தமிழ்நாட்டில் புரையோடியிருக்கிறது. இது பள்ளி மாணவர்கள் மத்தியில் பரவி வருவது மிகுந்த கவலைக்குரிய விசயமாகும். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக வன்முறைகளை தவிர்ப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துதற்கும் வழிமுறைகளை உருவாக்குவதற்கு நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவினை அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

            கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மூலம் கடும் தண்டனை பெற்றுத் தர அரசு முயற்சி எடுக்க வேண்டும். தாக்குதலுக்கான சின்னதுரை மற்றும் அவரது தங்கைக்கு உயர் தர சிகிச்சையளிக்க அரசு முன்வர வேண்டும். அத்துடன் அக்குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், இரண்டு குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

            தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதிக் கலவரங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையங்கள் கொடுத்த பல்வேறு பரிந்துரைகள் இதுவரை அமலாக்கப்படவில்லை. அவற்றை அமல்படுத்த ஆக்கப்பூர்வமான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.           

            மேலும், பள்ளிகளில் இதுபோன்று நிலவும் சாதிய பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள், அதன் வடிவங்களை அறவே ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, தேவையான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.