தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை உள்ளூர் மொழிகள் என்றுள்ளதுடன், காலப்போக்கில் அனைவரும் இந்தியை ஏற்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் விஷம் கக்கியுள்ளார். பல மொழிகள் பேசும் இந்தியாவின் மீது ஒற்றை மொழியை திணிக்கும் பாஜக ஆட்சியின் இந்தப் போக்கினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 38வது கூட்டத்திற்கு தலைமையேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளை, ‘உள்ளூர் மொழிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில், காலப்போக்கில் இந்தியை அனைவரும் ஏற்றாகும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் எட்டாவது அட்டவணையில் தேசிய மொழிகளைப் பட்டியலிட்டுள்ளது. அதில் செம்மொழித் தமிழ் உள்ளிட்டு 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் ஏராளமான மொழிகள் பேசப்படுகின்றன. எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் சமத்துவமாக நடத்துவதுடன், தாய் மொழியிலேயே அனைத்து சேவைகளையும் மக்கள் பெறக் கூடிய விதத்தில் அரசு நிர்வாகம் ஜனநாயகப்பட வேண்டும். கடந்த காலங்களில் அலுவல் மொழி குறித்து நடைபெற்ற விவாதங்களில் ஒற்றை மொழியை அனைத்து மாநிலங்களின் மீதும் திணிக்கப்படக் கூடாது என்ற உறுதியான எதிர்ப்புக்குரல் தொடர்ந்து எழுந்தது. அதன் காரணமாகவே இந்தி மற்றும் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது.
இப்போது பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், அனைத்து தேசிய மொழிகளுக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்து மொழியியல் ஆராய்ச்சிகளையும், தொழில்நுட்ப சாத்தியங்களையும் வேகப்படுத்த வேண்டும். ஆனால், பாஜக / ஆர்.எஸ்.எஸ் ஆட்சியோ ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் என்ற திசையில் பயணிக்கிறது. இந்தி மொழியை தனது அரசியல் ஆயுதமாக்கி குறுகிய லாபமடையும் நோக்கில் செயல்படுகிறது. அதன் ஒருபகுதியாகவே இந்தி மொழியை பேசாத மக்கள் மீதும் அதனை கட்டாயமாக திணிக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.
பாஜக/ஆர்.எஸ்.எஸ் முன்னெடுக்கும் தேசிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதமே அனைத்து மொழிகளின் தாய் என்று அறிவியலுக்கே விரோதமான கருத்தை முன்வைப்பதுடன், அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது ஒரு மொழி கற்பது கட்டாயம் என்றும் திணிக்கிறது. இப்போது அலுவல் மொழிக்கான அந்தஸ்து இந்தி மொழிக்கு மட்டுமே என தன்னிச்சையாக முன்வைக்கிறது. நாட்டில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்தியை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் என்ற நிலையில் இந்த நடவடிக்கைகள் மக்களை கொதிப்படையச் செய்து போராடத் தூண்டுவதாகவே அமைந்துள்ளன என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதே திசையில் ஒன்றிய அரசு பயணிக்குமானால், எப்பாடுபட்டாவது போராடித் தடுப்போம் – அனுமதிக்க மாட்டோம். பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக இந்தியாவை சிதைக்கும் இந்த முயற்சிகளுக்கு இடம் தர மாட்டோம். பன்முக இந்தியாவையும், மொழி சமத்துவத்தையும் பாதுகாப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்