சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

நாங்குநேரி மாணவி சந்திரா செல்விக்குவீர தீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கிடுக! முதலமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்!!

முதலமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (24.8.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் இத்துடன் கீழே தரப்பட்டுள்ளது.

            இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

பெறுதல்

           மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

           தமிழ்நாடு அரசு,

           தலைமைச் செயலகம்,

            சென்னை - 600 009.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:- தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தனது உயிரையும் பணயம் வைத்து வெட்டுக்காயங்களுடன் தனது அண்ணன் உயிரைக் காப்பாற்றிய நாங்குநேரி பள்ளி மாணவி சந்திரா செல்விக்கு “வீர தீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது” வழங்கிடுவதற்கும், அண்ணன் – தங்கை இருவரது கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்பதற்கும் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக:

            திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பட்டியலின மாணவன் சின்னதுரையும், அவரது தங்கை சந்திரா செல்வியையும் சாதி ஆதிக்க மனோபாவம் கொண்ட சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நிகழ்ந்ததை அறிந்தவுடன் படுகாயமுற்ற மாணவர் சின்னதுரைக்கும், மாணவி சந்திரா செல்விக்கும் உயர்தர சிகிச்சையளிப்பதற்கு தாங்கள் உத்தரவிட்டு மருத்துவர் குழு சிறப்பான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், பள்ளி மாணவர்கள் மத்தியில் தீண்டாமைக் கொடுமையை அகற்றுவதற்கும், சமத்துவம், சகோதரத்துவம் தழைத்தோங்குவதற்கும் ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து தகுந்த பரிந்துரைகளை வழங்குவதற்கு தாங்கள் உத்தரவிட்டதும் வரவேற்கத்தக்கது. இது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

            கொலைவெறித் தாக்குதல் நடத்தும் போது உயிருக்கு பயந்து அஞ்சி ஓடிவிடாமல் உறுதியாக நின்று அரிவாள் வெட்டை கையில் தாங்கி தனது சகோதரனது உயிரைக் காப்பாற்றிய சந்திரா செல்வியின் துணிச்சல் மிக்க நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது, பெருமைக்குரியது. இவரது உறுதியான நடவடிக்கையின் மூலமே ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இவரது செயல் மற்றவர்களுக்கு முன்னதாரணமானது என்பதில் ஐயமில்லை.

            எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது உயிரையும் பணயம் வைத்து சாதி ஆதிக்க மனோபாவம் கொண்ட சக மாணவர்களை எதிர்த்து போராடி தனது அண்ணன் உயிரைக் காப்பாற்றிய பள்ளி மாணவி சந்திரா செல்விக்கு, தமிழக அரசின் “வீர தீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது” வழங்கிடுவதற்கு பரிந்துரை செய்யுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

            மேலும், கொடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோரின் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்று இவர்களின் எதிர்கால வாழ்வை பாதுகாத்திட வேண்டுமெனவும், அவர்களது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.          

நன்றி.
இப்படிக்கு,
தங்களன்புள்ள, /ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்