ஸ்டெர்லைட் ஆலை துவங்கிய நாள் முதல் சுற்றுச்சூழல் சட்டங்களையும், தொழிலாளர் நலச் சட்டங்களையும், சுற்றுப்புற மக்களின் உடல் நலத்தையும் நீர், நிலம், காற்றின் தன்மையை பாதுகாப்பதிலும் தொடர்ச்சியாக தான்தோன்றித் தனமான சட்ட மீறல்களையே ஸ்டெர்லைட் நிறுவனம் நடத்தி வந்தது. 2010ம் ஆண்டு உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கில் கொண்டு அதை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்று ஆலை தடையின்றி இயங்க ஏற்பாடு செய்து கொண்டது. அதற்கு பின்னர் ஸ்டெர்லைட் நிறுவனம் தன்னுடைய மீறல்களை மூர்க்கத்தனமாகவும், அரசு அமைப்புகளின் எந்தவொரு சட்டத் திட்டங்களையும் சட்டை செய்யாமலும் நடந்து கொண்டிருந்தது. மாவட்ட நிர்வாகத்திலும், காவல்துறை உள்ளிட்ட அமைப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. இந்நிலையில் மக்கள் போராடிய போது 2018ம் ஆண்டு அப்போதைய அஇஅதிமுக அரசின் உதவியோடு 15 உயிர்களை கொன்று குவித்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு அந்த ஆலையை மூட உத்தரவிட்டது.
இது மட்டுமின்றி பல்வேறு விதமான நிதி முறைகேடுகளிலும் அந்த நிறுவனம் ஈடுபட்டது. ஆலையின் நச்சுக்கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டி நீரின்போக்கிற்கு தடையை ஏற்படுத்தியது. தற்போதைய வெள்ளத்தில் தூத்துக்குடி நகரம் பெரும் இழப்புகளைச் சந்தித்ததற்கு இந்த நச்சுக்கழிவுகள் நீர்வழித் தடங்களில் கொட்டப்பட்டதும் ஒரு முக்கியமான காரணம்.
இந்நிலையில் எப்படியாவது ஆலையை திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வாக்குறுதிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்தது. தமிழ்நாடு அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதியாகவும், திறமையாகவும் மக்கள் நலன் காக்கப்படும் என்ற நோக்கிலிருந்து வாதாடியதன் காரணமாக உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முழு மனதோடு வரவேற்கிறது. சிறப்பான வாதங்களை எடுத்து வைத்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்