இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (27.08.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் 1:
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு!
சிபிஐ (எம்) மாநிலக்குழு வன்மையான கண்டனம்!
தமிழ்நாடு முழுவதும் 25 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வாகனத்தின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.150 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கனவே பல மடங்கு கட்டண உயர்வால் அவதிப்பட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு மேலும் தாக்குதல் தொடுக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி கனரக வாகனங்கள் மூலம் எடுத்துவரப்படும் அத்தியாவசியப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள், காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது கொடும் தாக்குதல்களை ஒன்றிய பாஜக அரசு தொடுத்துள்ளது.
சுங்க கட்டணம் மிகப் பெரிய வருமானம் தரும் தொழிலாக மாறிவிட்டது. பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் காலாவதியான சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலித்து சட்ட விரோதமாக கொள்ளை லாபம் அடித்து வருகின்றன. தென்னிந்தியாவில் 41 சுங்க சாவடிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் குறித்து 2023ம் ஆண்டு டிசம்பரில் மத்திய தணிக்கை ஆணையம் நடத்தியுள்ள ஆய்வில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக அம்பலப்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எதிர்கட்சிகள் குரலெழுப்பின. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆண்டுக்கு ஆண்டு தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காக ஒன்றிய பாஜக அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தி வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் 25 சுங்க சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும், காலாவதியான சுங்க சாவடிகளை அகற்ற வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்.