சென்னை கீழ்ப்பாக்கத்தில் சிறப்பாக இயங்கி வரும் அரசு மனநல மருத்துவமனையை தனியாரின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் வகையில் அண்மையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். இது நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்துள்ளது. இக்கடிதத்தை சுகாதாரத்துறை செயலாளர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையை தனியாருக்கு தாரை வார்க்கும் இது போன்ற எந்தவொரு முயற்சிக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதியாக வலியுறுத்துகிறது.
ஆயிரத்திற்கும் அதிகமான புற நோயாளிகளுக்கு நாள்தோறும் சிகிச்சை அளிக்கும் இம்மருத்துவமனை, சுமார் 800க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகிறது. சிறப்பாக செயல்பட்டு வரும் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை மேலும் மேம்படுத்தி பராமரிப்பதற்கு மாறாக, அதை கம்பெனி சட்டத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனையாக மாற்ற வேண்டுமெனவும், அதற்கான முன்மொழிவை தயாரிக்க ஒரு சிறப்பு அலுவலரை நியமித்தும் தமிழக சுகாதார செயலர் ஒரு கடிதத்தை தன்னிச்சையாக வெளியிட்டுள்ளார். பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாகவும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் உயர்தர பன்னோக்கு மருத்துவமனை, கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை என சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் அரசு மருத்துமனைகளின் செயல்பாடுகள் முன்னுதாரணமாகவும் இருக்கும் நிலையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையை தனியார்மயமாக்கும் முயற்சி மிகவும் ஆபத்தானதாகும்.
எனவே நிதிநிலை, கட்டமைப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக சுகாதார துறை செயலாளரின் முயற்சி உடனடியாக கைவிடப்பட வேண்டுமெனவும், தமிழக அரசு இது போன்ற தனியார்மய ஆதரவு நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் ஆதரவு அளிக்க கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
பண்டிகை காலங்களில் மக்கள் நலன் என்ற பெயரில் தனியார் பேருந்தை ஊக்குவிப்பது சரியல்ல – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
எதிர்வரும் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பது சிறப்பானது. ஆனால், இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்திற்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முன்வந்துள்ள நடவடிக்கை ஏற்கத்தக்கல்ல.
தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு போக்குவரத்துக் கழகங்களின் சேவை முக்கிய பங்களிப்பு செய்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடும் முக்கிய காரணமாகும். அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடுவதற்கு பதிலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, அரசுக்கோ, பொதுமக்களின் நலனுக்கோ வலுசேர்க்காது. இது எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தினை தனியாருக்கு விடும் நிலை ஏற்பட்டு விடும்.
ஆகவே, தமிழக அரசு குறிப்பாக போக்குவரத்துறையில், நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார்துறையை அனுமதிக்க வேண்டாமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்