சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் அது மிக கனமழையாக மாறக்கூடும் என்றும், வெள்ள அபாயங்கள் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் புழல் ஏரிகள்அதன் கொள்ளளவை முழுமையாக எட்டும் நிலை உள்ளது. சாத்தனூர், மாயனூர், மேட்டூர் ஆகிய அணைகளிலும் தண்ணீர் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. கொசஸ்தலை ஆறு, பூண்டி ஏரிகளிலிருந்து உபரிநீர் திறப்பினால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பல பகுதிகளில் தண்ணீர் தேங்கும் சூழலும் உருவாகி உள்ளது.
எனவே, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, மழை மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேற்குறிப்பிட்ட ஏரிகள், அணைகளிலிருந்து நீரை திறந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டால் அது குறித்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை முன்னதாகவே அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உரிய பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை தயார் நிலையில் வைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதோடு, மக்கள் குடியிருக்கும் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் தேங்கும் மழை நீர், கழிவு நீர் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்திட அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறோம். மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடிசைப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
தோழர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், சிபிஐ(எம்)