மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (12.09.2025) நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தான் வாழ்ந்த காலத்தில் மார்க்சிய லட்சியங்களுக்காகவும், நாட்டின் விடுதலையை பாதுகாப்பதற்காகவும் இடைவிடாமல் போராடியவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி. தனது மறைவுக்குப் பின்னரும் தனது உடலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களின் படிப்புக்காக ஒப்படைக்க முடிவு செய்தார். தான் மறைந்த பின்னரும் மானுட மேம்பாட்டுக்காக பயன்பட வேண்டுமென்ற உன்னதமான லட்சியத்தை வழங்கிய தோழர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவு நாளையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உடல் தானம் செய்யும் பதிவு இயக்கத்தை நடத்தியது.
சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், க.பாலபாரதி, மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், வே.மீனாட்சி சுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. சாமுவேல்ராஜ், எஸ். கண்ணன், க. சுவாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் எம். ராமகிருஷ்ணன், ஆர். வேல்முருகன், ஜி. செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் ப. செல்வசிங், ஐ. ஆறுமுக நயினார், வெ. ராஜசேகரன், இரா. சிந்தன், ஆர். சுதிர், தோ. வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை சார்பில் மருத்துவர் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர்-செயலாளர், டிரான்ஸ்டான், இயக்குநர் மருத்துவர் சுகந்தி ராஜகுமாரி, இணை இயக்குநர் மருத்துவர் ஸ்ரீப்பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. சாமுவேல்ராஜ், க. சுவாமிநாதன், எஸ். கண்ணன், மாவட்ட செயலாளர்கள் எம். ராமகிருஷ்ணன், ஆர். வேல்முருகன், ஜி. செல்வா, மூத்த தலைவர் ப. சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ப. செல்வசிங், வெ. ராஜசேரகன், ஆர். பத்ரி, பி. சுகந்தி, இரா. சிந்தன், க. சரவணன் உள்ளிட்டு கட்சியின் மாநில மையத் தோழர்கள், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மாவட்ட தோழர்கள் 235 பேர் தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை சார்பில் வந்திருந்த மருத்துவர் கோபால கிருஷ்ணன், உறுப்பினர்- செயலளர், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையம், மருத்துவர் சுகந்தி ராஜகுமாரி, இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனரகம், மருத்துவர் ஸ்ரீபிரியா, இணை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனரகம் ஆகியோரிடம் படிவத்தை வழங்கினர். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து இன்று ஒரே நாளில் முதல்கட்டமாக 1586 பேர் உடல்தான இயக்கத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இயக்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும்.
உடல் தானம், உறுப்பு தானம் மகத்துவத்தின் உன்னத செயல்களை உள்வாங்கி தன்னலமற்ற இந்த மகத்தான சேவையில் இறங்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
மானுட பயன்பாட்டிற்காகவும், மருத்துவ அறிவியலின் வளர்ச்சிக்காகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த மகத்தான சேவைப் பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். தன்னலமற்ற இந்த உன்னதமான பணிக்கு தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் தங்களுடைய உடல்களை தானம் செய்ய முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







