தமிழ்நாடு கல்வித் துறையின் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் உருவாவதற்கு காரணமாக செயல்பட்ட கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
தேசப்பிதா காந்தியடிகளின் வழிகாட்டுதல் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் தமிழ் வழி பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு காரணமாக அமைந்தவர் எஸ்.எஸ். ராஜகோபாலின் தந்தை ஆவார். தேசப்பற்றும், பொதுவுடமை கருத்தியல்பால் மிகுந்த ஆர்வமும் கொண்டவர் ராஜகோபாலன். தமிழ்நாட்டில் மிக இளம் வயதில் தலைமையாசிரியர் பொறுப்பிற்கு வந்தவர்.
பள்ளிக்கூட தலைமை ஆசிரியராக செயல்பட்ட காலத்திலும், அதன் பின்பும் பள்ளிக் கல்வியில் முற்போக்கான மாற்றங்கள் உருவாவதற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செலுத்தி வந்துள்ளார். குறிப்பாக, கலைஞர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையிலான குழுவில் சிறப்பாக தனது பங்களிப்பை செலுத்தியவர்.
ஆசிரியர் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொள்வதிலும், மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதிலும் எஸ்.எஸ்.ராஜகோபாலன் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. இடதுசாரி கட்சிகளின் செயல்பாடுகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டவர். தனது இறுதி நாள் வரை தீக்கதிர் நாளிதழ் வாசகராக இருந்தார்.
ஏற்றத்தாழ்வு மிக்க சமூக அமைப்பு மேம்பட, எல்லோருக்கும் சமமான, தரமான தாய்மொழி வழி கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது வாழ்நாளில் துடிப்புடன் செயலாற்றிய எஸ்.எஸ் ராஜகோபாலன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலியை உரித்தாக்குகிறோம். அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்வித்துறையில் இவரது பங்களிப்பை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு முனைவர் எஸ். எஸ். ராஜகோபாலன் அவர்கள் பெயரில் முனைவர் பட்ட ஆய்விற்கான கல்வி உதவித் தொகை (The Government of Tamil Nadu should institute a Research Fellowship in the name of Dr. S.S. Rajagopalan) வழங்குவதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







