மாநிலக் குழு

தூத்துக்குடி அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!

Sate

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. இந்தக் கொடூரமான படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விவசாயி மகளான மாணவி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மார்ச் 10ஆம் தேதியன்று வீட்டிலிருந்து உடல் உபாதை கழிப்பதற்கு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது தாய் மற்றும் சகோதரி தேடியும் கிடைக்கவில்லை.   இதனால், அவர்களது பெற்றோர் குளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர் மகளிர் காவல் நிலையம் செல்லுங்கள் என்று அலைக்கழித்துள்ளனர்.

இந்நிலையில் உறவினர்கள் காட்டுப் பகுதியில் தேடிய போது முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வியில் சாதிக்க வேண்டுமென்று துடித்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது அக்குடும்பத்தினருடைய கனவையே சிதைத்துள்ளது.  காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் ஒருவேளை இக்கொடுமை தடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே, இந்த பாலியல் வன்கொடுமை படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து போக்சோ சட்டத்தின் படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அலட்சியமாக நடந்து கொண்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும், இதுபோன்ற குற்றங்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடுபெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்