தீர்மானங்கள்மாநிலக் குழு

தமிழகத்தில் இயங்கும் ஐ.டி. துறைகளில் வேலை பறிப்பு – அச்சத்தின் பிடியில் மென்பொறியாளர்கள்! ஒன்றிய, மாநில அரசுகள் பிரத்யேக சட்டங்களை இயற்றி ஊழியர்களைப் பாதுகாத்திட – சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்தல்!

Temp Copy

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (19.12.2022) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தமிழகத்தில் இயங்கும் ஐ.டி. துறைகளில் வேலை பறிப்பு – அச்சத்தின் பிடியில் மென்பொறியாளர்கள்! ஒன்றிய, மாநில அரசுகள் பிரத்யேக சட்டங்களை இயற்றி ஊழியர்களைப் பாதுகாத்திட – சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்தல்!

உலகப் பொருளாதார மந்த நிலை என்று காரணம் கூறி தகவல் தொடர்பு நிறுவனங்களில் வேலை பறிப்பு நடவடிக்கைகளை பல்வேறு நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்றும், தமிழக அரசு தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கையை எடுத்திட வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ஐ.டி. துறை 227 பில்லியன் டாலர் வளர்ச்சி கொண்டுள்ளதாகவும், 0.45 சதவிகித மில்லியன் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வேலை வாய்ப்புகள் கடந்த ஆண்டுகளை விட மிக குறைவானதாகும். இக்கால கட்டத்தில் பெரும் நிறுவனங்கள் தங்களது லாபத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன. எதிர்வரும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க வேலை பறிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

சமீபத்தில் Amazon, CISCO, Twitter, Meta, HP, Alphabet போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களில் 6.1 சதவிகிதம் பேரை நீக்கியுள்ளன. Startup நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு எடுப்பது 61 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த பின்னணியில் இந்தியாவில், தமிழகத்தில் இயங்கி வரும் ‘வெர்ச்சூசா’ போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்துள்ளன. ஊழியர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க அவகாசமும் வழங்கவில்லை. தொழிலாளர்கள் தாங்களே ராஜினாமா செய்வது போல் கையெழுத்திட சட்ட விரோதமாக கட்டாயப்படுத்தப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான தமிழக மென்பொறியாளர்கள் இளம் வயதிலேயே வேலையிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஐ.டி. நிறுவனங்கள் நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தாத நிலை உள்ளது. இதன் மீது ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு தொழிலாளர் நலச் சட்டங்களை ஐ.டி. நிறுவனங்கள் அமல்படுத்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். ஐ.டி. துறை ஊழியர்களின் பிரச்சனைகளை பேசி தீர்க்கும் வகையில் முத்தரப்பு கமிட்டிகள் அமைத்திட வேண்டும். தொழிலாளர்கள் நலச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் குறிப்பாக, ஒப்பந்த (Bond) முறையில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும், வேலையிழப்புகளில் இருந்து மென்பொறியாளர்களை பாதுகாப்பதற்கு ஐ.டி. துறைக்கென்று பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.