தமிழ்நாடு அரசு கடந்த 2009ம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் 354/2009இன் படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்த வேண்டிய அரசு மருத்துவர்களுக்கான ஊதியம் தொடர்ந்து அதிமுக ஆட்சியின் போதும் உயர்த்தப்படாமல் நீடித்துக் கொண்டுள்ளது. அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் வலியுறுத்திய பிறகும், மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையிலும் முந்தைய அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு புறக்கணித்து வந்தது.
தமிழகம் மருத்துவத்துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்வதற்கு மருத்துவர்களின் அளப்பரிய சேவையும், உழைப்பும் மிக முக்கிய காரணமாகும். தனியார் மருத்துவமனைகள் மருத்துவத்தை லாபமீட்டும் தொழிலாக்கி கொள்ளை லாபம் ஈட்டி வரும் சூழலில், அரசு மருத்துவர்கள் வருவாய் நோக்கமின்றி கிராமப்புறங்களுக்குச் சென்று ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், அவர்களின் நியாயமான கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாது அரசு மருத்துவர்களுக்கு அரசாணை எண் 354ன் படி உரிய ஊதிய உயர்வு வழங்கிட வேண்டுமெனவும், கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கிட வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.