தீர்மானங்கள்மாநில செயற்குழு

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்திடுக!

Temp Copy

கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி காத்திருப்பில் இருந்த 2400 செவிலியர்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டனர். கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்ததில் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க பணியும், தன்னலமற்ற சேவையும் பிரதான காரணமாகும். இப்பணியினை தமிழக மக்களும், ஜனநாயக இயக்கங்களும், அமைப்புகளும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

                இந்நிலையில், எம்.ஆர்.பி தேர்வு எழுதி மதிப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 2400 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு இவர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்து, நிரந்தர தன்மையற்ற தற்காலிக பணியாளர்களாக மாற்றுப் பணியில் பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் செவிலியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காப்பாற்றியதில் செவிலியர்களின் பங்கும் முக்கியமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

                எனவே, செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து அவர்களோடு பேச்சுவார்த்i நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்தி அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.