மற்றவை

மோடி ஆட்சியில் அமலாக்கத்துறையிலும் ஊழல்! உரிய விசாரணை நடத்தி வெள்ளையறிக்கை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவரை மிரட்டி மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கனவே ரூ. 3 கோடி பேரம் பேசி, ரூ.31 லட்சம் லஞ்சமாக வாங்கிய அந்த அதிகாரி, அடுத்த தவணையாக ரூ. 20 லட்சம் பெறும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மாட்டிக்கொண்டுள்ளார். அதற்காக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். சில நாட்கள் முன்புதான் ராஜஸ்தானில் இதே போல ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாநில அதிகாரிகளிடம் மாட்டினார்.

ஏற்கனவே, ஊழல்வாதிகளை தப்ப விடுவதற்கு சி.பி.ஐ அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, பாஜகவை சார்ந்த நபர்கள் மத்திய முகமைகளின் பேரால் லஞ்சம் வாங்குவது, பாஜகவினர் வீட்டில் சோதனைக்கு சென்றுவிட்டு கட்சியினர் தலையீட்டுக்கு பணிந்து திரும்பி வருவது என அடுக்கடுக்கான முறைகேடுகளை பார்த்து வருகிறோம்.

சுயேச்சையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒன்றிய விசாரணை முகமைகள் அனைத்தும் பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய் விட்டன. அதற்காகவே வானளாவிய அதிகாரங்கள் அந்த முகமைகளிடம் குவிக்கப்பட்டன. இப்போது, மோடி ஆட்சியின் ஊழல், முறைகேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.

எனவே, இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்