மற்றவை

2023 டிச-3 மாற்றுத்திறனாளிகள் உலக தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் லட்சக் கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உலக தின வாழ்த்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) தெரிவித்துக் கொள்கிறது.

தற்போது உக்ரைன்-ரஷ்யாவுக்கும் இடையேயும், பாலஸ்தீன மக்களை அந்நாட்டைவிட்டு விரட்டி அனாதைகளாக்கும் நோக்கில் இஸ்ரேல் நடத்துகின்ற இனப்படுகொலைப் போரும் நடந்துகொண்டிருக்கின்றன. எப்போதும் போன்று உலக நாடுகளை மிரட்டி, தனது அடிமைகளாக்கும் நோக்கில் உலக சண்டியராகக் கருதப்படும் அமெரிக்காவும், பிரிட்டன் உள்ளிட்ட அதன் கூட்டணி நாடுகளுமே தற்போது நடந்துகொண்டிருக்கிற போர்களுக்கும் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

பிணக்குவியலையும், மாற்றுத்திறனாளிகளையும் உருவாக்கும் இப்படிப்பட்ட போர்களை உலக மக்கள் எப்போதும் விரும்புவதில்லை. இந்தியா இதுவரை பின்பற்றி வந்த பாலஸ்தீன ஆதரவு கொள்கைகளுக்கு மாறாக, அமெரிக்காவுக்கு அடிபணிந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் நோக்கில் ஐ.நா. சபை கொண்டு வந்த மனிதாபிமான போர்நிறுத்தத் தீர்மானத்தில்கூட மோடி அரசு விலகி நின்றது வெட்கக் கேடானாது. இந்திய மாற்றுத்திறனாளிகள் மோடி அரசின் இத்தகையக் கேடுகெட்ட செயலை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியிருப்பதுப் பாராட்டுதலுக்குரியது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பினாமியாக விளங்குகிற மோடி தலைமையிலான பாஜக அரசு, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாற்றுத்திறனாளிகளின் உடல் பாகங்களாகக் கருதப்படும் உபகரணங்களுக்கே ஜிஎஸ்டி வரி விதித்தது. பிற்போக்குத்தனமான வகையில் திவ்யங்(தெய்வாம்சம் கொண்டவர்கள்) என மாற்றுத்திறனாளிகளுக்கு பெயர் சூட்டிவிட்டு, ஒன்றிய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்ட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட ஒதுக்காமல், ஆண்டுக்காண்டு வெட்டிச் சுருக்கி, இருந்த பல நலத்திட்டங்களை முடக்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு துரோகம் செய்கிறது

கண்ணியமான வாழ்க்கைக்கு சட்டப்படியான இட ஒதுக்கீட்டின்படி வேலைவாய்ப்புகள் உருவாக்காமல், இருக்கின்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களையும் இழுத்து மூடி நடுத்தெருவில் நிறுத்துகிறது. கிராமப்புற ஏழை மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுவரும் நூறு நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைத்து வருகிறது. சட்டப்படியும், நீதிமன்ற உத்தரவுப்படியும் மாதம் 35 கி உணவுதானியம் வழங்குவதற்கான அந்தியோதயா அன்ன யோஜன திட்ட அட்டை வழங்க மறுக்கிறது. குடும்ப சுகாதார சர்வே(சூகுழளு)யில் கூட மாற்றுத்திறனாளிகள் விபரங்களை சேகரிக்கும் சரத்துகளை நீக்கியது. ஆட்சி செய்த இந்தக் காலம் முழுவதும் நாட்டில் வெறும் 0.38 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கும் ஒன்றிய அரசின் மாதாந்திர உதவித்தொகை ரூ.300லிருந்து ஒரு நயா பைசாகூட மோடி அரசு உயர்த்தவில்லை. மாறாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளில்கூட ஊழல் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக சமீபத்திய சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதையும் மறந்துவிடக்கூடாது. எனவே, இந்த அரசு நீடிக்கும் வரை மாற்றுத் திறனாளிகளுக்கு விடிவு கிடையாது என்பதை கவனப்படுத்துகிறோம்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறைக்கு முதலமைச்சரே பொறுப்பு வகித்து வருது சிறப்பானது. எனினும், ஐ.நா.சபை இயற்றியுள்ள 2007 ஆம் ஆண்டு விதிகள் மற்றும் நாடாளுமன்றம் 2016ல் இயற்றியுள்ள உரிமைகள் சட்ட விதிகள் இவற்றை தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் முழுமையாக அமல்படுத்த கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து வேலைக்காகக் காத்திருக்கிற சுமார் 1.25 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு திட்டங்கள் தீட்டி வேலைகள் வழங்குவதன் மூலம், கண்ணியமான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகும் கூடுதல் செலவை ஈடுகட்ட வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை ரூ.1500ஐ காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகை, மீனவர், விவசாயி என மற்ற திட்டங்கள் மறுக்கப்படுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்டு வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய நிலைமை இல்லை என்பதை கருத்தில் கொண்டு, வேறு எந்த திட்டத்தையும் பெற மாற்றுத்திறனாளி உதவித்தொகையைக் காரணம் காட்டக்கூடாது என ஒரு தனி அரசாணை வெளியிடுவது நல்லது. அதேபோன்று, தெலுங்கானாவில் அதிகபட்சமாக ரூ.4016, ஆந்திரா ரூ.3000 என உதவித்தொகைகள் கூடுதலாக வழங்கப்படுவதை கருத்தில் கொண்டு உதவித்தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நீண்ட காலம் கிடப்பில் போடாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். உரிமைகள் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் முன்னெடுக்கும் அனைத்து இயக்கங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும் என இந்த உலக தினத்தில் உறுதி அளிக்கிறோம்! வாழ்த்துகிறோம்!!

(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்