ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

சென்னை அரசுப் பள்ளிகளில் மூட நம்பிக்கைகளை பரப்பும் சர்ச்சைப் பேச்சு! சிபிஐ(எம்) கண்டனம்!!

22222222222 Recovered

மூடநம்பிக்கையுடனும், ஆபாசத்துடனும், மாற்றுத்திறனாளி ஆசிரியரை மிரட்டிய மகாவிஷ்ணுவை கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!!

அரசு பள்ளிகளில் ஆட்சேபகரமாகவும், அறிவியலுக்கும், கல்விக்கும் சம்பந்தமில்லாத மூடக்கருத்துக்களை பரப்பும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதற்கு வலுவான எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ளன.  ஆன்மீகம், பக்தி என்ற பெயரால் அறிவியல் கண்ணோட்டங்களை பலவீனப்படுத்தி, பள்ளி மாணவ மாணவியரிடையே பழமைவாத மற்றும் மூடக்கருத்தியலை கொண்டு செல்லும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் பங்கேற்று பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் அறிவியலுக்கு புறம்பான அபத்தமான கருத்துக்களை உள்ளடக்கிய உரையை பள்ளி மாணவர்களிடம் பகிர்ந்துள்ளார். அப்போது அந்த பள்ளியில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் அவரது உரைக்கு ஆட்சேபனை தெரிவித்தபோது, அந்த ஆசிரியரையும் அனைவரின் முன்னிலையிலும் மிகவும் தரக்குறைவான வார்த்தையில் பேசியதோடு, மாவட்ட கல்வி முதன்மை அதிகாரியின் அனுமதியின் பேரிலேயே, பள்ளி நிகழ்ச்சியில் தான்  பங்கேற்று உரையாற்றுவதாகவும் அந்த பேச்சாளர் அவரை மிரட்டியுள்ளார். இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்னால் வேறு ஒரு அரசு மேல்நிலை பெண்கள் பள்ளியிலும் சம்பந்தப்பட்ட இதே நபர் சுமார் நான்காயிரம் மாணவிகளிடம் உரையாற்றும்போது “மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம், போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத் திறனாளிகளாகவும், ஏழைகளாகவும் பிறக்கிறார்கள், கை, கால், கண்பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள் தான் காரணம் என்றும், இதுபோன்று பல்வேறுவிதமான மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையிலும், ஆபாசமாகவும்  உரையாற்றியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படியான நிகழ்ச்சியை எப்படி நீங்கள் அரசு பள்ளியில் நடத்தலாம் என பெற்றோர் மாணவ கழகத்தின் நிர்வாகிகள் ஆட்சேபம் தெரிவித்த போது, அது ஒரு நன்னெறி நிகழ்ச்சிதான், எனவே அதில் ஒன்றும் தவறில்லை என பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோர் தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பதும், மூடக்கருத்துக்களை பரப்புவதும் மிகவும்

இந்த செய்தி ஊடகங்களில் வெளியான பின்னணியில் பள்ளிக் கல்வித்துறை ஒரு குழுவை அமைத்து நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள முன்வந்திருப்பதாகவும், தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகள் அரசு பள்ளிகளில் நடத்தப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறைக்கோ, அல்லது அரசு உயர் அதிகாரிகளோ அறிந்திருக்கிறார்களா, அவர்கள் அனுமதியோடு தான் இத்தகைய நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடைபெறுகிறதா என பல சந்தேகங்கள் இப்பிரச்னையை சுற்றி எழுகிறது.

 சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழாக்களை அரசுப் பள்ளிகளில் கொண்டாட வேண்டுமென்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக செய்திகள் வந்தன. தற்போது தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற போர்வையில் அறிவியலுக்கு புறம்பாகவும், வாழ்வியல் நெறிகளுக்கு விரோதமாகவும், மாணவர்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் வகையிலும் ஆன்மீக சொற்பொழிவுகள் அரசுப்பள்ளிகளில் நடைபெறுகின்றன. இது கல்வித்துறையின் உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடத்தப்பட்டு மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.  தற்போது அரசுப் பள்ளிகளில் மூடகருத்துக்களை பரப்பும் வகையிலான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்வுகளால் பள்ளி கல்வித்துறை யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லையோ என்கிற ஐயம்

எனவே,  அதிக பணத்தை செலவழித்து இந்த மூடநம்பிக்கை பேச்சாளரை அழைத்து சொற்பொழிவு நிகழ்ச்சியை முன்னெடுத்த  மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும், தலைமையாசிரியரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும், இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி கல்வித்துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் முதற்கொண்டு அனைவரின் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாணவிகள் மத்தியில் மூடநம்பிக்கையை விதைக்கும் வகையிலும், ஆபாசமாகவும் பேசிய பேச்சாளர் மகாவிஷ்னு மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திட வேண்டுமெனவும், முற்போக்கான அறிவியலுக்கும், கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லாமல் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதை முற்றாக தடுப்பதற்கு உயர் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

 கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்