செய்தி அறிக்கை

பண்டிகைக்காலம், மழை வெள்ள சூழலை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலையேற்றம்; அரசு தலையிட்டு முறைப்படுத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்

Cpim Statenment

பண்டிகைக் காலம் மற்றும் மழை வெள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. நல்லெண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை 4 நாட்கள் இடைவெளியில் ஒரு லிட்டர் ரூ.50 வரை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இவ்விசயத்தில் உடனடியாக அரசு தலையீடு மேற்கொண்டு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

அண்மையில் வெளியான பணவீக்க தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கடந்த 9 மாதங்களில் கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. இதில் காய்கறிகளின் விலை 36 சதவீதம் அதீத உயர்வை கண்டிருப்பதும், தானியங்கள், முட்டை, பருப்பு வகைகள், பழங்கள் என உணவுப் பொருட்களின் விலை சாதாரண மக்கள் வாங்க இயலாத அளவுக்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையில், இன்றைய நிலவரப்படி (15, அக்டோபர்) நல்லெண்ணெய் லிட்டர் ரூ.425, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் லிட்டர் ரூ.180, பூண்டு கிலோ ரூ.450 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அரிசி வகைகள் கிலோவுக்கு ரூ.10, பருப்பு வகைகள் கிலோ ரூ.20 வரை விலை உயர்த்தி விற்கப்பட்டன. காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயம் விலை இரண்டு மடங்கு வரை உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.250, கேரட் ரூ.200, இஞ்சி ரூ.180 என விலை உயர்ந்துள்ளன. சில வியாபாரிகள், நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தி இன்னும் விலையேற்றி கொள்ளையடிப்பதையும் பார்க்கிறோம்.

மொத்தவிலைக் குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக சொன்னாலும், உணவுப்பொருட்கள், காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக இருப்பதை அந்த விபரங்களும் காட்டுக்கின்றன. பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிகம் வாங்கும் உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் விலையேற்றமடைந்துள்ளன. கணிணி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்களின் விலையிலும் உயர்வு உள்ளது.

எனவே, கிடுகிடுவென உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலைகளை குறைப்பதுடன், எண்ணெய், பருப்பு, காய்கறி போன்ற  அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேசன் கடைகள் மூலம் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலையில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடை மற்றும் மின் சாதனப் பொருட்களின் விலையில் அசாதாரண உயர்வு ஏதுமில்லாமல் கட்டுப்படுத்த அரசின் தலையீடு அவசியம் என்பதை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.