சேலம் உத்தமசோழபுரம் அருகே சூளைமேடு பகுதியில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்து, எதிர்புறம் சென்ற சிறிய ரக சரக்கு வாகனத்திலும், அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீதும் மோதியதில் கர்ப்பிணி பெண், கைக் குழந்தை உட்பட எட்டு பேர் பலியாகியுள்ளனர், பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
அரசுப்பேருந்தில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அரசுப் பேருந்துகள் பராமரிப்புக்கும், தரமான உதிரிபாகங்கள் பொருத்தவும் உரிய கவனம் செலுத்த வேண்டும். மேலும், இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காமல் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், விபத்திற்கு காரணமாக அரசுப் பேருந்து இருந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிடவும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கவும் – இழப்பீடு வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
விபத்து இழப்பீடு வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் தாமதமில்லாமல் உரிய அனுமதியை வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







